மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பாராமதி தாலுகாவிற்கு உட்பட்ட சுபே கிராமத்தின் அகல்யாபாய் சௌக் பகுதியில் ஒரு கொடூரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு சகோதரர்கள், வளைவில் திரும்பும்போது வாகனம் சறுக்கி கீழே விழுந்ததில், பின்னால் வந்த பாரம் தூக்கும் லாரி அவர்கள் மீது ஏறிச் சென்றது. இந்த விபத்தின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்விபத்தில் ஷெண்டேகவாடாவைச் சேர்ந்த சோமநாத் தத்தாத்ரே தோம்பரே (19) மற்றும் அவரது சகோதரர் சுபம் தத்தாத்ரே தோம்பரே (18) ஆகிய இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சோமநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த சுபம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சுபே காவல் துறையினர், லாரி ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியில் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கொடூர விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறுகலான வளைவுகள் மற்றும் கனரக வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகமே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், அப்பகுதியில் சாலை பாதுகாப்பை பலப்படுத்தவும், வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
