தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில், அவரது அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நேற்று இந்த நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடனேயே திமுக, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
ஒரு முற்போக்கான அரசியல் பாதையை முன்னெடுப்பதாகக் கூறும் அரசு, இதுபோன்ற நியமனங்களை மேற்கொள்வது ஏற்புடையதல்ல என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்தன. இந்நிலையில், ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் நியாயமான குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவிக்கான உத்தரவை ரத்து செய்வதாக தவெக அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட ஒரே நாளில் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
