ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் அந்த நாடு மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணைகளை சீனா வழங்கத் தயாராகி வருவதாக உளவுத்துறைத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மியாமியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சீனா அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் காத்திருப்பதாகத் தனது பாணியில் சுருக்கமாகவும் அதே சமயம் மிரட்டலாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவுகள் ஏற்கனவே சிக்கலான நிலையில் இருக்கும் போது, ஈரானுக்கு சீனா முட்டுக் கொடுப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், சீனாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். அடுத்த மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் நடத்தவுள்ள சந்திப்பில் இந்த ஆயுத விநியோக விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
