20 ரூபாய் தண்ணீர் பாட்டில்… 85 ரூபாய் டெலிவரி சார்ஜ்! ஆன்லைன் நிறுவனங்களின் ‘அல்டிமேட்’ பிசினஸ் மேஜிக்.. நெட்டிசன்களை அதிர வைத்த வைரல் வீடியோ..!

By Swetha on வைகாசி 22, 2026

Spread the love

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் வர்த்தக முறை மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரிக்கும் ஒரு டெலிவரி பாயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்காலத்தில் உணவு, மளிகைப் பொருட்கள் என அனைத்தும் ஆன்லைன் மூலம் வீட்டிற்கே வரவழைக்கப்படும் நிலையில், இந்த வீடியோ ஆன்லைன் நிறுவனங்களின் செலவினங்கள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசும் டெலிவரி ஊழியர், சந்தையில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சாதாரண தண்ணீர் பாட்டிலை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ததாகக் கூறுகிறார். இதற்காக அந்த வாடிக்கையாளர் ஆன்லைன் செயலியில் 29 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, அந்த ஒரு தண்ணீர் பாட்டிலை டெலிவரி செய்ததற்காக அந்த ஆன்லைன் நிறுவனம் டெலிவரி ஊழியருக்கு 85 ரூபாய் வழங்கியுள்ளது. வெறும் 9 ரூபாய் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு, ஊழியருக்கு 85 ரூபாய் நிறுவனம் எவ்வாறு வழங்கியது, இதில் நிறுவனத்திற்கு என்ன லாபம் இருக்க முடியும் என்று அவரே வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்தவும், செயலியைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் ஆன்லைன் நிறுவனங்கள் இத்தகைய பெரும் தொகையை முதலீடு செய்கின்றன என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் கிடைப்பது சரியானதுதான் என்றும், ஆனால் இத்தகைய பிசினஸ் மாடல்கள் நீண்ட காலத்திற்கு எவ்வாறு சாத்தியம் என்றும் சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.