தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிக வேகமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையில், வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னை கோவளத்தில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்ற பிறகு, த.வெ.க மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக ஒரே மேடையில் சந்தித்து விவாதிக்கவிருப்பது இதுவே முதல்முறை என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இக்கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பினை த.வெ.க-வின் முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களுமான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து முதல்வர் விஜய்யின் அழைப்புக் கடிதத்தைக் கொடுத்தனர். இந்த அழைப்பை அன்போடு ஏற்றுக் கொண்ட வைகோ, தங்களது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளப்போவதாக உறுதி அளித்ததுடன், தாங்கள் த.வெ.க கூட்டணியில் நீடிப்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மதிமுக-வைத் தொடர்ந்து, சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமையகமான காயிதே மில்லத் மன்சிலுக்கு அமைச்சர்கள் குழு விரைந்தது. அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனைச் சந்தித்து, ஜூலை 1 கூட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். திமுக கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறி, மக்கள் தீர்ப்பை மதித்து த.வெ.க அரசுக்கு ஆதரவளித்துள்ள முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக இக்கூட்டத்தில் பங்கேற்பதை அவரும் உறுதி செய்துள்ளார். பாரம்பரியமிக்க இத்தகைய கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்திருப்பது த.வெ.க அரசுக்குக் கூடுதல் பலத்தை தந்துள்ளது.
வெறும் சாதாரணச் சந்திப்பாக இல்லாமல், தமிழக அரசின் எதிர்கால அரசியல் திசையைத் தீர்மானிக்கும் ஆழமான விவாதங்களை உள்ளடக்கியதாக இந்த கோவளம் கூட்டம் அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, த.வெ.க அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தோழமைக் கட்சிகளை அரவணைத்து, ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வது குறித்தும், அமைச்சரவை விரிவாக்கம் அல்லது முக்கியப் பதவிகளில் தோழமைக் கட்சிகளுக்கு வழங்க வேண்டிய பிரதிநிதித்துவம் குறித்தும் இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம். மேலும், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை த.வெ.க தலைமையிலான இந்த பலமான கூட்டணி எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆரம்பகட்டப் புள்ளியாக இக்கூட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
