நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டனர்.
இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள், அரசு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு துறை அதிகாரிகளும் தங்களின் கருத்துக்களையும், நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளையும் முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த மாநாட்டில் அதிகாரிகளிடையே உரையாற்றிய முதலமைச்சர் விஜய், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இது வெறும் கட்சிக்காரர்களுக்கான அரசு அல்ல என்றும், பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான அரசாகத் திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவெகவினர் உட்பட எவருடைய அரசியல் தலையீடும் இல்லாமல் காவல்துறை முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட முழு உரிமை வழங்கப்படும் என்றும் அவர் இந்த கூட்டத்தில் அதிரடியாகப் பேசியுள்ளார்.
