“அப்பறம் வச்சிக்கிறேன்..” செம கடுப்பான விஜய்!.. கோபத்தின் உச்சிக்கே சென்ற தவெக தலைவர்.. பின்னணி என்ன?

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய த.வெ.க. அரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க.விற்கும் இடையே ஏற்பட்டுள்ள திரைமறைவு அரசியல் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வின் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற செய்திகள் வெளியான போது, “அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் அரசுக்குத் தந்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவோம்” என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் அதிரடி காட்டினார். ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் விடுத்த இந்த மிரட்டல் முதல்வர் விஜய்யை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. எனினும், தனது கோபத்தை வெளியில் காட்டாத விஜய், மிரட்டல்களுக்குப் பணியாமல் 5 ஆண்டு கால நல்லாட்சியைத் தர ஒரு மாற்றுத் திட்டத்தை யோசிக்கத் தொடங்கினார்.

“இன்று வி.சி.க. மிரட்டும், நாளை காங்கிரஸ், அடுத்த நாள் கம்யூனிஸ்ட்டுகள் மிரட்டுவார்கள்; இப்படியே இருந்தால் எப்படி நல்லாட்சி தர முடியும்?” என்று ஜான், ஆதவ், விஷ்ணு, புஸ்ஸி ஆனந்த் போன்ற தனது முக்கிய நிர்வாகிகளிடம் முதல்வர் விஜய் விவாதித்துள்ளார். இதன் விளைவாகவே, தங்களை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அதன் மூலம் வரும் இடைத்தேர்தலைச் சந்தித்து, த.வெ.க.விற்கான தனிப் பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் வலுவாக்கிக் கொள்வது என்ற அதிரடித் திட்டம் உருவானது. த.வெ.க.வின் இந்த திடீர் வியூகத்தை சற்றும் எதிர்பார்க்காத திருமாவளவன், உடனடியாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் பேசத் தொடங்கினார்.

   

செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், அ.தி.மு.க.வினர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைவதை ஆரோக்கியமானதாக வி.சி.க. பார்க்கவில்லை என்று குறிப்பிட்டதோடு, “எந்தச் சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்; நம்பிக்கையோடு 5 ஆண்டு காலம் ஆட்சி செய்யுங்கள்” என்று முதல்வர் விஜய்க்குப் பகிரங்கமாகவே உத்தரவாதம் அளிக்கும் தொனியில் பேசினார். மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களைக் கட்சியில் இணைத்துக் கொள்வது த.வெ.க.வின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்பதால், அக்கட்சியின் தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மென்மையாக அட்வைஸ் செய்துள்ளார்.

   

திருமாவளவனின் இந்த திடீர் மென்மையான போக்கிற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் கணக்கு இருப்பதாக த.வெ.க. தரப்பினர் விவரிக்கின்றனர். இடைத்தேர்தல் மூலம் த.வெ.க.விற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், தங்களுக்கு வி.சி.க.வின் ஆதரவு தேவைப்படாது என்பதையும், அதன் பின்னர் ஆதவ் அர்ஜுனாவை வைத்தே விஜய் அரசியல் செய்வார் என்பதையும் திருமா உணர்ந்துள்ளார். ஆட்சி அதிகாரத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் அரசியல் இலக்குகளைச் சாதிக்கலாம் என்று அமைச்சரவையில் இணைந்த வி.சி.க.விற்கு, தற்போதைய அரசியல் மாயஜாலங்களால் தங்களின் எதிர்பார்ப்புகள் தூள் தூளாகிவிடுமோ என்ற அச்சம் வந்துள்ளதாலேயே, ஆட்சி கவிழாது என உத்தரவாதம் அளித்து அட்வைஸ் செய்யத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.