ஜாார்க்கண்ட் மாநிலம் ராஞ்ச பகுதியில் உள்ள ஒரு சிறிய கடையில், சர்வதேச அளவில் த்ரோபால் போட்டிகளில் இந்தியாவிற்காக நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற அமர்தீப் குமார் தற்போது காய்கறி விற்று வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தாலும், பொருளாதார நெருக்கடி மற்றும் முறையான அரசு ஆதரவு இல்லாததால் குடும்பத்தைக் காப்பாற்ற தன் தந்தைக்கு உதவியாக காய்கறி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மலேசியா மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு பதக்கங்களைக் குவித்த இந்தச் சாதனையாளர், தன் வறுமையைப் போக்க பகலில் வாடகை வண்டி ஓட்டுவதாகவும், மீதமுள்ள நேரங்களில் காய்கறி விற்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் பட்ட கஷ்டங்களுக்கும் போட்டிகளுக்காக வாங்கிய கடன்களை அடைக்கவுமே இந்தத் தொழில்களைச் செய்வதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிற மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை மற்றும் உதவிகள் கிடைக்கும் நிலையில், ஜார்க்கண்டில் தனது தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். விளையாட்டு வீரர்களின் இத்தகைய அவல நிலை, நாட்டின் விளையாட்டுத்துறையில் உள்ள புறக்கணிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, இணையவாதிகள் மத்தியிலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
