புகையிலை துப்ப முயன்றபோது நேர்ந்த விபரீதம்… வந்தே பாரத் இரயில் மோதி நபர் பலி – பதறவைக்கும் வீடியோ..!!

By Soundarya on பங்குனி 26, 2026

Spread the love

பீகார் மாநிலம் பார் (Barh) இரயில் நிலையத்தில், அதிவேகமாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்த கோரமான சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22348), பார் இரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த இரயிலுக்கு அந்த நிலையத்தில் நிறுத்தம் கிடையாது என்பதால், அது மிக அதிவேகமாகச் சென்றுள்ளது. அந்த நேரத்தில் பிளாட்பாரத்தில் நின்றிருந்த நபர் ஒருவர், புகையிலை (Khaini) துப்புவதற்காகத் தண்டவாளத்தை நோக்கி குனிந்துள்ளார்.

இரயில் வருவதைக் கவனித்த லோகோ பைலட் (ஓட்டுநர்) தொடர்ந்து எச்சரிக்கை ஒலியை (Horn) எழுப்பிய போதிலும், அந்த நபர் அதைக் கவனிக்காமல் தண்டவாளத்திற்கு மிக அருகில் சென்றுள்ளார். ஒரு நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் வந்த இரயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போன்களில் பதிவாகியுள்ளன.

   

தகவலறிந்து வந்த இரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதிவேக இரயில்கள் செல்லும் நிலையங்களில் பயணிகள் மஞ்சள் கோட்டிற்குப் பின்னால் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்றும், கவனக்குறைவாகத் தண்டவாளத்திற்கு அருகில் செல்வது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் இரயில்வே நிர்வாகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.