2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஐஜேகே கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில், அங்கிருந்தே அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த தொகுதிப் பங்கீட்டில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், திமுகவின் செல்வாக்குமிக்க 13 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரின் தொகுதிகளை அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, அமைச்சர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), பெரியகருப்பன் (திருப்பத்தூர்) ஆகியோரின் தொகுதிகள் பாஜக வசம் சென்றுள்ளன. அதேபோல், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி மற்றும் கே.என்.நேருவின் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகள் அமமுகவுக்கும், அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு தொகுதி தமாகாவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. திமுகவின் ‘கோட்டை’ என்று கருதப்படும் பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை இறக்கிவிட்டு பலப்பரீட்சை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டிலும் அதிமுக சில ஆச்சரியமான முடிவுகளை எடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது; மற்றவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற திமுகவின் பலமான பகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளிடமே அதிமுக ஒப்படைத்துள்ளது. 14 முக்கிய விஐபி தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்திருப்பதன் மூலம், திமுக அமைச்சர்களை அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே முடக்கும் ஒரு பெரிய அரசியல் சதுரங்க வேட்டையை எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
