தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகி, பின்னர் தனது அசாத்திய நகைச்சுவை திறமையால் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் நடிகர் முத்துக்காளை. 18 வயதிலேயே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்று, வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சினிமாவுக்குள் நுழைந்த இவர், பல படங்களில் வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து செய்த நகைச்சுவைகள் இன்றும் ரசிக்கப்படுபவை.
அண்மையில், முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 17 நாட்களாக அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் வேதனையடைந்த முத்துக்காளை, தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு உருக்கமான வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.
முத்துக்காளையின் கோரிக்கையை ஏற்று, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அரசு தரப்பு அதிகாரிகளும் நேரில் சந்தித்து உறுதியளித்திருந்தனர். இருப்பினும், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த மாலதி, சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்தச் சோகமான செய்தி அவரது குடும்பத்தினரையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
