முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு சவால்களைக் கடந்து அதிமுகவைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியை விட்டு நீக்கி, பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான தோல்வியும், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததும் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி தற்போது கட்சியில் புதியதொரு உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.
சமீபத்தில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எடப்பாடி பழனிசாமியின் முடிவை எதிர்த்து மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் 25 பேர் விஜய்க்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இந்தச் சம்பவம் இபிஎஸ் தலைமையின் மீதான அதிருப்தியையும், கட்சி அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைந்துள்ளதையும் வெளிச்சம்பத்திற்கு கொண்டு வந்தது. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என இரண்டு வலுவான பிரிவுகள் உருவாகியுள்ள நிலையில், மொத்தமுள்ள 82 மாவட்டச் செயலாளர்களில் 50-க்கும் மேற்பட்டோர் வேலுமணி தரப்பிற்குத் தங்கள் ஆதரவை ரகசியமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைய மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு, எடப்பாடிக்கு எதிராகச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று வேலுமணி தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, கட்சியின் சட்ட விதிகளின்படி மாற்று வழியை வேலுமணி கையில் எடுத்துள்ளார். கட்சியின் விதிமுறைப்படி, மொத்தப் பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவசரக் காரணத்திற்காகச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டக் கோரி மனு அளித்தால், பொதுச்செயலாளர் 30 நாட்களுக்குள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த சட்ட வழியைப் பயன்படுத்தி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் வேலுமணி தரப்பு தீவிரமாகக் கடிதங்களைச் சேகரித்து வருகிறது.
ஒருவேளை, உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தும் 30 நாட்களுக்குள் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கூட்டத்தைக் கூட்டத் தவறினால், கோரிக்கை விடுத்த உறுப்பினர்களே தங்களுக்குள் ஒரு தற்காலிகத் தலைவரை நியமித்துச் சிறப்புப் பொதுக்குழுவை நடத்த சட்டத்தில் இடமுண்டு. கடந்த கால அதிமுக உட்கட்சி மோதல்களின் போதும் இந்த விதிதான் நீதிமன்றம் வரை சென்று விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 50-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களின் ஆதரவோடு வேலுமணி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கடுமையான அரசியல் நெருக்கடியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
