சென்னையில் இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகம் தொடர்பாக மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்புப் பயிற்சி முகாமிற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நடத்தும் இந்தப் பயிற்சி, வரும் ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை கிண்டியிலுள்ள அதன் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அடிப்படை கணினி அறிவு கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம். இணையவழி வர்த்தகத்தைத் தொடங்குவது, டொமைன் வாங்குவது, இணையதள வடிவமைப்பு மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைகள் குறித்து இதில் விரிவாகக் கற்றுத்தரப்படும்.
இந்தப் பயிற்சியில் பொருட்கள் விற்பனைக்கான சந்தைப்படுத்துதல் உத்திகளான எஸ்சிஓ (SEO) மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் பற்றியும் நிபுணர்கள் விளக்கவுள்ளனர். மேலும், நிதி மேலாண்மை, பட்ஜெட் தயாரித்தல் மற்றும் எதிர்காலத்தில் தொழிலை விரிவுபடுத்துவதற்கான நுட்பங்களும் இதில் இடம்பெறுகின்றன.
பங்கேற்பாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதியும், பயிற்சியின் இறுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது 9360221280 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ தங்களது பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
