ஹரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்), இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் தங்களது எஸ்யுவி (SUV) கார்களால் மோதிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்வாப்பூர் பகுதியில் நடந்த இந்த மோதலில், கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை வைத்திருந்த அந்த நண்பர்கள், பொதுச்சாலையில் சினிமா பாணியில் கார்களை நேருக்கு நேர் மோதி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்த இரண்டு கார்களும் அதிவேகமாகச் சென்று ஒன்றையொன்று இடித்துக்கொள்வதும், இதனால் சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து நிற்பதும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, அந்த வழியாகச் சென்ற ஒரு இருசக்கர வாகன ஓட்டி, இந்த இரண்டு ராட்சத கார்களுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளன.
Gurugram: Two friends in Dhanwapur village clashed in road rage, ramming their Mahindra Scorpio N SUVs after one allegedly drove on the wrong side.
Video of the dusty brawl went viral. No injuries; families reached compromise, no police case filed pic.twitter.com/sSIsSEN1tx
— Megh Updates 🚨™ (@MeghUpdates) April 5, 2026
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜேந்திர பார்க் போலீசார், சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும், தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட கோபத்தில் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது. பின்னர், இரு தரப்பு குடும்பத்தினரும் சமரசமாகப் போவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் அளித்ததால், முறையான புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இவர்களின் செயல் இணையத்தில் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
