தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, ஆளுங்கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தங்கள் தொகுதிகளில் போட்டி போட்டு கொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகின்றனர். அரசு வழங்கும் 3,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு ஒருபுறமிருக்க, திமுக நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் குக்கர், சமையல் பாத்திரங்கள் மற்றும் பட்டுச் சேலைகளை விநியோகித்து வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் குக்கர் உள்ளிட்ட பொருட்களையும், அமைச்சர் கே.என்.நேரு சுமார் 5,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய பெட்டியையும் வழங்கி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். சென்னையில் கோலப் போட்டிகள் நடத்தி ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி திமுகவினர் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.
ஆளுங்கட்சியின் இந்த அதிரடி கிஃப்ட் மழையைக் கண்டு திகைத்துப் போயுள்ள எதிர்க்கட்சி நிர்வாகிகள், தங்களால் இவ்வளவு செலவு செய்ய முடியவில்லையே எனப் புலம்பி வருகின்றனர். தேர்தல் ஆதாயத்திற்காக வழங்கப்படும் இந்தப் பரிசுகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றாலும், வரும் நாட்களில் இன்னும் பல சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
