அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோவில் உள்ள ஜான் ஜே உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் மற்றும் வானியல் ஆசிரியராகவும், கால்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த 38 வயதான சாட் ஆலன் ரோட்ரிக்ஸ், தனது 17 வயது மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் முதல் வகுப்பறையில் இவர்கள் இருவருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடந்த வாரம், அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் வகுப்பறையில் இவர்கள் இருவரும் தனியாக ஒன்றாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார். இந்தத் தகவல் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையினரிடம் ஆசிரியை சாட் ஆலன் ரோட்ரிக்ஸுடன் தான் உடலுறவில் இருந்ததை வாக்குமூலமாக அளித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக ரகசியமாக நடந்து வந்த இந்த இழிவான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பள்ளி மாவட்ட நிர்வாகம் கூறுகையில், சட்ட அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அந்த ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. கல்வியாளருக்கும் மாணவருக்கும் இடையே நிலவ வேண்டிய நம்பிக்கையைச் சீரழித்து முறையற்ற உறவு வைத்திருந்ததற்காக இவர் மீது இரண்டாம் நிலைக் குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
