ஜவுளி தொழிலில் பல வருடம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அதற்கு விடாமுயற்சி இல்லாமல் சாத்தியம் இல்லை. அப்படி ஜவுளி உலகில் ஒரு புது புரட்சியை ஏற்படுத்தியவர் தான் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன். 40 ஆண்டுகளுக்கு முன்பு கே ஆர் நாகராஜன் 1983 ஆம் ஆண்டு ராமராஜன் காட்டன் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் சிறு கடையை ஆரம்பித்த நாகராஜன், அதில் தோல்வி அடைந்தார். பின்னர் மறுபடியும் 85000 ரூபாயை கொண்டு ராமராஜ் காட்டனை மொத்த விற்பனை மையமாக திருப்பூரில் தொடங்கினார். சந்தையில் தான் வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தார் நாகராஜன்.
ராம்ராஜ் காட்டன் கடையை திறந்த சில நாட்களிலேயே மக்களுக்கு விலையை விட அதன் தரத்தில் தான் விருப்பம் இருந்ததை கண்டுபிடித்தார். அவரது நிறுவனம் தனித்துவமாக தெரிவதற்கு உயர் தர பருத்திகளை கொண்டு வேஷ்டி, பனியன், உள்ளாடை போன்றவற்றை தயாரித்தார். பின் நாட்களில் பெண்களுக்கான ஆடைகள், கதர் ஆடை என அனைத்தையும் இணைத்துக் கொண்டார்.
ராம்ராஜ் நிறுவனம் தான் தென்னிந்தியாவிலே முதல் முறையாக வேட்டிகளுக்கு விளம்பரம் செய்த நிறுவனம் ஆகும். அதேபோல நம்பகமான டீலர்களை கண்டுபிடிப்பதற்காக கேலண்டர்களை வழங்கி அதன்மூலம் சந்தைப்படுத்திய நிறுவனமும் ராமராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு மொத்த விற்பனை மையத்திலிருந்து சில்லரை விற்பனை துறையில் கால் பதித்தார் நாகராஜன். வாடிக்கையாளர்களுக்காக ஷோரூம்களை திறந்தார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்னிந்தியாவில் பல கிளைகளை திறந்து மிகப்பெரிய புகழ்பெற்ற நிறுவனமாக தனது உழைப்பினால் கடந்த 40 வருடங்களாக தனி மனிதனாக உருவாக்கி இருக்கிறார் நாகராஜன்.
மேற்கத்திய வெஸ்டன் ஆடைகளுக்கு இருந்த மோகத்தின் நடுவே மக்களுக்கு பாரம்பரிய வேஷ்டிகளின் மீதான ஈர்ப்புகளை உருவாக்கியவர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் தான். இளைஞர்களுக்கு வேட்டி கட்ட தெரியாததை அறிந்த நாகராஜன் புதுமையாக யோசித்து வெல்குரோ வேட்டிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தி அதில் வெற்றி கண்டவர் நாகராஜன்.

தனிமனிதனாக விற்பனையை தொடங்கிய நாகராஜன் தற்போது 4500 பணியாளர்களைக் கொண்டு தினமும் இரண்டரை லட்சம் மீட்டர் பருத்தி நூலை வேட்டி சேட்டை மற்றும் உள்ளாடைகளாக மாற்றி ரூ.1000 கோடி டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனமாக மாற்றி இருக்கிறார் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன்.
