காரைக்குடி அருகே சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். இவரின் இயற்பெயர் முத்தையா என்பதாகும். பத்திரிக்கையில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த போது தனது பெயரை கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக்கொண்டார் கண்ணதாசன். இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆவார்.
4000த்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5000த்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் மற்றும் சாகித்ய அகடாமி விருதை வென்றவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் அவர்கள் எழுதும் பாடல்கள் அப்படியே நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.. ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அப்படியே கச்சிதமாக எழுதுபவர் கண்ணதாசன். அதே போல் அன்றைய காலகட்டத்தில் அவருக்கு பகையாக இருந்த திராவிட தலைவர்கள் ஒரு நேரத்தில் அவருக்கு எதிரியாக இருந்த எம்ஜிஆரை கூட விட்டு வைக்காமல் தனது பாடல்களில் மறைமுகமாக தாக்கி எழுதுவதில் வல்லவர் கண்ணதாசன். அப்படி கண்ணதாசன் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை தாக்கி ஒரு பாடல் எழுதி இருக்கிறார். அது என்ன பாடல் என்பதை இனி காண்போம்.

1963ஆம் ஆண்டு எம்ஜிஆர், சரோஜாதேவி, எம் ஆர் ராதா, டி ஆர் ராஜகுமாரி நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம் ‘பெரிய இடத்துப் பெண்’. இந்த படத்தை டி ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கியிருப்பார். எம் எஸ் விஸ்வநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்தப் படத்தில் ஒரு பாடல் வரும். அது ‘அவனுக்கு என்ன தூங்கிவிட்டான், அகப்பட்டவன் நானே’ என்ற பாடல். இந்த பாடல் உருவான விதத்தில் பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. அது என்னவென்றால் இந்த படத்தின் காட்சியை கூறி இயக்குனர் பாடல் ரெக்கார்டிங் செய்வதற்கு ஒரு நாளை முடிவு செய்து விஸ்வநாதன் அவர்களையும் கண்ணதாசன் அவர்களையும் வர சொல்லி இருந்தாராம்.

அப்போது குறிப்பிட்ட தேதியில் சரியான நேரத்தில் கண்ணதாசன் அங்கு வந்து விட்டாராம். ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் வராமல் வீட்டிலேயே தூங்கி விட்டாராம். பொதுவாக ஒரு பாடல் உருவாக்குவதற்கு அந்த காலத்தில் இசையமைப்பாளர் மெட்டு போட உடனே பாடல் ஆசிரியர் வரிகளை எழுதுவார். அன்றைய தினம் விஸ்வநாதன் வராததால் இயக்குனர் கண்ணதாசன் அவர்களிடம் கூறி மெட்டு இல்லை என்றால் பரவாயில்லை நீங்கள் பாடல் வரிகளை எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார். கவியரசு கண்ணதாசன் அவர்கள் விஸ்வநாதன் அவர்களை தாக்கும் விதமாக அவனுக்கு என்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானே என்ற பாடலை எழுதியுள்ளார். பாடல்களின் மூலமாகவே மறைமுகமாக தாக்கும் ஒரே ஆள் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தான்.
