உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 50 வயதான மன்வேந்திர சிங் என்பவர் திடீரென காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அவரது 21 வயது மகன் அக்ஷத் சிங்கிடம் நடத்திய அதிரடி விசாரணையில், அவரே தனது தந்தையைக் கொலை செய்த திடுக்கிடும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அதிகாலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அக்ஷத், தனது தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அத்துடன் நிற்காமல், கொடூரத்தின் உச்சமாக தந்தையின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து, ஒரு பெரிய டிரம்மிற்குள் மறைத்து வைத்துள்ளார். இந்தக் கொடூரச் செயலைத் தடுக்க முயன்ற தனது சகோதரியையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவர் முன்னிலையிலேயே இந்தச் செயலைச் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அக்ஷத் சிங்கை கைது செய்துள்ள காவல்துறையினர், டிரம்மிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடும்பத் தகராறு ஒரு தந்தையின் உயிரைப் பறித்ததோடு, மகனை ஒரு கொடூரக் கொலைகாரனாக மாற்றியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
