சென்னையில் அதிர்ச்சி..! பார்சலில் வந்த மண்டை ஓடு… மயானத்திலிருந்து எடுத்து அனுப்பிய சக ஊழியர்… வெளியான பகீர் காரணம்..!!

By Soundarya on மாசி 21, 2026

Spread the love

சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரியும் ஊழியருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மர்மமான பார்சல் வந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு மண்டை ஓடு மற்றும் மிரட்டல் கடிதம் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பார்சல் வந்த முகவரி மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், அதே கடையில் வேலை பார்க்கும் தினேஷ்குமார் என்பவர் தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தச் செயலைச் செய்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட ஊழியருக்கும் தினேஷ்குமாருக்கும் இடையே வேலையிடத்தில் சில காலமாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவரைப் பயமுறுத்தி வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில், தனது நண்பர்கள் இருவரின் உதவியுடன் மயானத்தில் இருந்து மண்டை ஓட்டை எடுத்து வந்து பார்சல் அனுப்பியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தற்போது போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.