திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் (30) என்பவருக்கும், அவருடன் சித்தாளாக பணிபுரிந்த சரிதா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சரிதாவுக்கு 14 வயதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ள நிலையில், ராமச்சந்திரன் அச்சிறுமியைத் திருமணம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், வயது தடை மற்றும் சட்டப் பிரச்சனைகள் காரணமாகத் திருமண முயற்சியைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளனர்.
இதனிடையே, சரிதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த ராமச்சந்திரன், அந்த 14 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்துத் தாயிடம் சிறுமி பலமுறை முறையிட்டும், சரிதா அதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பள்ளியில் சோர்வாக இருந்த நிலையில், இதுகுறித்துத் திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாகத் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் புகார் உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் மற்றும் சிறுமியின் தாய் சரிதா ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, இருவரையும் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.
