ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், தற்போது இப்போராட்டம் மனிதர்களுக்கு இடையிலான மோதலிலிருந்து மாறி, உயர் தொழில்நுட்ப ரோபோக்கள் மற்றும் ஆளில்லா வாகனங்கள் இடையிலான போராக உருவெடுத்துள்ளது. உலக வரலாற்றிலேயே முதன்முறையாக, தரைவழிப் போருக்கு ரோபோக்களை அனுப்பி ரஷ்ய வீரர்களைச் சரணடைய வைத்து உக்ரைன் ராணுவம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தப் போர் நடவடிக்கையில் உக்ரைன் தரப்பில் ஒரு வீரர் கூட நேரடியாகக் களமிறங்கவில்லை என்பதும், எந்தவித உயிரிழப்பும் இன்றி இந்த வெற்றி சாத்தியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், முழுக்க முழுக்க ஆளில்லா தரை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம் எவ்வாறு மனித உயிர்களைக் காப்பாற்றுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இத்தகைய தரைவழி வாகனங்கள் 22,000-க்கும் மேற்பட்ட சவாலான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இந்த அபார வளர்ச்சிக்கு அந்நாட்டின் பாதுகாப்புத் துறையின் தீவிர உழைப்பே காரணம் எனப் பாராட்டியுள்ள ஜெலன்ஸ்கி, ஆண்டுக்கு மில்லியன் கணக்கான எஃப்பிவி (FPV) ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் எல்லையிலிருந்து சுமார் 1,750 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை என்றும், வரும் காலங்களில் இந்தத் தாக்குதல் வரம்பு மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தற்போது நிலவி வரும் சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில், கடல்சார் பாதுகாப்பிலும் உக்ரைன் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்வதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். கருங்கடலில் எதிரி கடற்படை மற்றும் வான்வழித் தாக்குதல்களை முறியடித்த அனுபவம் தங்களுக்கு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு போன்ற உலகளாவிய விவகாரங்களில் உக்ரைனின் இந்தத் தொழில்நுட்ப அனுபவம் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் இந்தப் போரில், ரோபோக்கள் மூலம் உக்ரைன் பெற்றுள்ள இந்த வெற்றி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
The future is already on the front line – and Ukraine is building it. These are our ground robotic systems. For the first time in the history of this war, an enemy position was taken exclusively by unmanned platforms – ground systems and drones. The occupiers surrendered, and the… pic.twitter.com/qLQKfxPdiB
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 13, 2026
