திமுக அரசுக்கு எதிரான அதிருப்தியைப் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி பெறலாம் எனத் திட்டமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனைத் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் செயலாக முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்துவதால், தேர்தல் களம் இப்போது நிர்வாகக் குறைகளைத் தாண்டி மாநில உணர்வு சார்ந்த போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால், அதிமுகவின் பழைய தேர்தல் கணக்குகள் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளன.
இந்த விவகாரத்தில் பாஜவை எதிர்க்க முடியாமலும், அதே சமயம் அமைதியாக இருந்தால் ‘தமிழக நலனுக்கு எதிரானவர்’ என்ற விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற இக்கட்டான சூழலில் அதிமுக உள்ளது. இந்தச் சங்கடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திமுக, அதிமுகவைத் தமிழக உரிமைகளைத் தாரை வார்த்த கட்சியாகச் சித்தரிக்கத் தொடங்கியுள்ளது. மாநில உரிமைகளை முன்னிறுத்தி ஸ்டாலின் ஏற்கனவே முன்னிலை பெற்று வரும் நிலையில், எடப்பாடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
