ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சொன்ன ஒரு வார்த்தை.. சினிமாவை விட்டு விலகிவிட முடிவெடுத்த சிவக்குமார்..

By Sumathi

Updated on:

நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களுக்கே சீனியர் நடிகராக இருந்தவர். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர். இன்று சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை, ஜோதிகாவின் மாமனார் என்ற சிறப்புகளை பெற்றிருப்பவர். சிறந்த ஓவியர். குறிப்பாக சினிமாவில் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் வாழ்ந்த மிகச்சிறந்த ஒழுக்கசீலராக மதிக்கப்பட்டவர்.

Sivakumar

   

கடந்த 1965ம் ஆண்டில் திருலோகசுந்தர் இயக்கத்தில் வெளியான காக்கும் கரங்கள்தான் சிவக்குமார் நடித்த முதல் படம். அதன்பிறகு திருமால் பெருமை, கந்தன் கருணை, ரோஜாப்பூ ரவிக்கைக்காரி, ஆட்டுக்கார அலமேலு, வண்டிசக்கரம், சிந்து பைரவி என பல படங்களில் நடித்து, முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சினிமாவில் மட்டுமின்றி சித்தி, அண்ணாமலை போன்ற டிவி சீரியல்களிலும் சிவக்குமார் நடித்திருந்தார். 1991ம் ஆண்டுக்கு பிறகு குணச்சித்திர நடிகராக மாறிய சிவக்குமார் காதலுக்கு மரியாதை, சேது, ராமன் அப்துல்லா போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தார். சினிமாவில் கடைசியாக சிவக்குமார் நடித்த படம் 2001ம் ஆண்டில் வெளியான பூவெல்லாம் உன்வாசம் என்ற படம்தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமா, சீரியல் என எதிலுமே இனி நடிக்கப்போவது இல்லை என்று நடிகர் சிவக்குமார் முடிவு எடுக்க இதுதான், இந்த சம்பவம்தான் காரணம் என, நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Sivakumar

அதாவது டிவி சீரியல் ஷூட்டிங் ஒன்றில், நடிகர் சிவக்குமார் உணர்ச்சிபூர்வமான ஒருகட்டத்தில் நடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த ஒரு துணை நடிகை, போனில் கத்தியபடி பேசி இருக்கிறார். ஏம்மா, முக்கியமான சீன்ல நடிச்சிட்டு இருக்கும்போது இப்படி சத்தம் போடறியே என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகை அலட்சியமாக, ஏன் சார் இப்படி பண்றீங்க, இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க, எப்படியும் டப்பிங் பேசத்தானே போறீங்க, டப்பிங்ல சரி பண்ணிக்குங்க சார், எனக் கூறியிருக்கிறார். எப்படி இருந்த சினிமா, இப்படி ஆயிடுச்சே? இனிமேலும் இப்படிப்பட்ட சினிமாவுல நாம நடிக்கணுமா,ன்னு ஒரே நிமிஷத்தில சினிமா வேண்டாமுன்னு சிவக்குமார் முடிவெடுத்ததாக சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi