தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்ய சபா எம்பி சீட்டிற்கான தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அந்த சீட்டைக் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) காங்கிரஸ் கட்சி நெருக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிரவீன் சக்ரவர்த்திக்கு இந்த எம்பி சீட்டைத் தருமாறு காங்கிரஸ் தலைமை தவெகவிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி தனது கட்சியின் முதல் எம்பியை டெல்லிக்கு அனுப்ப தவெக திட்டமிட்டிருந்த வேளையில், காங்கிரஸின் இந்த திடீர் கோரிக்கையும் அழுத்தமும் தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு இணங்கி விட்டுக் கொடுக்குமா அல்லது தனது சொந்த வேட்பாளரை நிறுத்துமா என்ற அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
