கருவா சத்து விரத நாளன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த தனது கணவனின் உடலைக் கண்டு மருத்துவமனையில் கதறி அழுத இளம் மனைவியிடம், மாமியார் “நீ ஏதாவது சாப்பிட்டாயா?” எனச் சந்தேகத்தோடு விசாரித்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 29 அன்று கருவா சத்து விரதக் கொண்டாட்டத்தின் போது, நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவருடன் விரதம் இருந்த அவரது மனைவியும் உடன் வந்திருந்தார். கணவன் இறந்த சோகத்தில் கதறி அழுத அந்தப் பெண்ணிடம், அவரது மாமியார் மற்றும் உறவினர்கள் “நீதான் விரதத்தின் நடுவில் ஏதாவது சாப்பிட்டுவிட்டாயா? அதனால்தான் என் மகனுக்கு இப்படி ஆனது” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி விசாரித்துள்ளனர்.
மருத்துவமனையில் பணியில் இருந்த எம்பிபிஎஸ் இன்டர்ன் மருத்துவர் டாக்டர் ஆஷா சிங் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் துயரச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். “மின்கசிவு காரணமாகக் கணவன் பரிதாபமாக இறந்துவிட்டான்; ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரோ அவர் விரதம் மீறிச் சாப்பிட்டதால்தான் கணவன் இறந்ததாக நம்பி அவரிடம் சண்டையிட்டுள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் தொடர்வது வேதனையளிக்கிறது” என அவர் வேதனை தெரிவித்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து, மூடநம்பிக்கையைக் கண்டித்தும் பெண்ணைப் பலிகடா ஆக்கும் சமூகச் சிந்தனையை எதிர்த்தும் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
