இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO), 2026-ஆம் ஆண்டின் தனது முதல் ராக்கெட் ஏவுதலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இன்று (ஜனவரி 12, 2026) காலை 10.17 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ‘EOS-N1 Anvesha’ என்ற செயற்கைக்கோளைச் சுமந்து கொண்டு PSLV C-62 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. ஆரம்பக்கட்ட நிலைகள் வெற்றிகரமாக அமைந்தாலும், ராக்கெட்டின் 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக PSLV ராக்கெட் ஒரே மாதிரியான தோல்வியைச் சந்திப்பது விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டும் இதேபோன்று 3-வது நிலையிலேயே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய ராக்கெட்டான PSLV-யில் மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிந்து சரிசெய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
