அ.தி.மு.க. அமைச்சர்களுக்கிடையே உள்கட்சி உரசல்… திடீர் சமாதானத் தூது… ஈபிஎஸ்ஸின் மாஸ்டர் பிளான்… தீரன் சின்னமலை விழாவில் களமிறங்கும் சீனியர்கள்?… தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Visaka on ஆடி 31, 2026

Spread the love

அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் பி. தங்கமணி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த உள்கட்சி உரசல்களுக்கு மத்தியில், அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகளுக்குப் பதிலாக, வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலர் பதவியும், தங்கமணிக்கு அமைப்புச் செயலர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், தங்களின் முந்தைய மாவட்டச் செயலாளர் பதவிகள் தராததால் அதிருப்தியடைந்த இருவரும் அப்பதவிகளை ஏற்க மறுத்ததுடன், கட்சி கூட்டங்களையும் புறக்கணித்து வந்தனர்.

இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சிகளில் இருவருக்கும் தலைமைப் பொறுப்பு வழங்கி பழனிசாமி சமாதானத் தூது அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, ஈரோடு அரச்சலூரில் துணைப் பொதுச்செயலர் வேலுமணி தலைமையிலும், சேலத்தில் அமைப்புச் செயலர் தங்கமணி தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் ஏற்கெனவே நிராகரித்த அதே கட்சிப் பதவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இருவரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் சலசலப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.