டெல்லி ஜகத்புரி பகுதியைச் சேர்ந்த 52 வயது மின்னணு பொறியாளரான கமல் சிங், குடும்ப சொத்து பிரச்சினை காரணமாக தனது மனைவி கோமலுடன் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாட்டில் இருந்துவந்துள்ளார். சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில், கணவன்-மனைவி இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமல் சிங், மனைவியை கத்தரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
மாலையில் தாயைத் தொடர்புகொள்ள முடியாத குழந்தைகள் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வரவேற்பறையில் தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கத்தரிக்கோலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கமல் சிங் மட்டும் ஒரு பையுடன் வெளியேறியது உறுதியானதால், அவரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொலைக்கு முன்பே வங்கிக் கணக்கிலிருந்து 7 லட்சம் ரூபாயை எடுத்த கமல் சிங், போலீசாரைத் திசைதிருப்பி நேபாளத்திற்குத் தப்ப முயன்றுள்ளார். எனினும், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீசார், உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையம் அருகே வைத்து அவரைக் கைது செய்தனர். ‘தி ஸ்டேர்கேஸ்’ என்ற ஹாலிவுட் வெப் தொடரைப் பார்த்து, சொத்தை அடைவதற்காகவே முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
