தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் இந்த முக்கியத் தொகுதியில் தவெகவின் பங்களிப்பு இல்லாமல் போவதை விரும்பாத அக்கட்சித் தலைவர் விஜய், தற்போது ‘பிளான் பி’ என்ற அதிரடி உத்தியைக் கையில் எடுத்துள்ளார்.
இதன்படி, தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமார் என்பவரை அடையாளம் கண்டு, அவருக்கு தவெகவின் முழு ஆதரவை வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரகசியத் திட்டத்தின் மூலம், எடப்பாடி தொகுதியில் அதிமுகவுக்கு வலுவான சவாலை ஏற்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்காகச் சம்பந்தப்பட்ட சுயேச்சை வேட்பாளரிடம் விஜய் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளதாகவும், தொகுதியில் உள்ள தவெக தொண்டர்கள் அனைவரும் இவருக்காகக் களப்பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவின் இந்தத் திடீர் நகர்வு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி தொகுதியின் தேர்தல் களம் இப்போது கூடுதல் பரபரப்பைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
