ஆபத்தான ‘ஸ்மார்ட்போன்’ காதல்… திருமணமானவர்களை குறிவைக்கும் டேட்டிங் செயலிகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

By Muthu Mani on சித்திரை 3, 2026

Spread the love

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், காதலைத் தேடுவது என்பது ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டிங் செயலிகள் மூலம் மிகவும் எளிதாகிவிட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்டர்நெட்’, ‘சாட்டிங்’ போன்றவை புதிய விஷயங்களாக இருந்த நிலையில், இன்று இந்தியாவின் பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை டேட்டிங் செயலி கலாசாரம் ஆழமாக ஊடுருவியுள்ளது. இளைய தலைமுறையினர் தங்களுக்குப் பொருத்தமான துணையைத் தேட இந்தச் செயலிகளையே பெரிதும் சார்ந்துள்ளனர்.

சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 40 லட்சம் பேர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இதில் 65 சதவீதம் ஆண்களும், 35 சதவீதம் பெண்களும் உள்ளனர். மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்தச் செயலிகளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதுதான். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு 148 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட கள்ளத்தொடர்புகள் சமூகத்தில் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

   

பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இந்தச் செயலிகளில் செலவிடுகின்றனர். குறிப்பாக மதிய வேளைகளிலும் (12 – 3 மணி), நள்ளிரவு நேரங்களிலும் இத்தகைய அரட்டைகள் உச்சத்தை எட்டுகின்றன. இதில் ஆண்கள் 25 முதல் 30 வயதுடைய பெண்களைத் தேடுகிறார்கள். அதேசமயம், பெண்கள் பெரும்பாலும் மருத்துவர்கள், தணிக்கையாளர்கள் போன்ற பொருளாதார ரீதியாக வசதியான நிலையில் உள்ள ஆண்களையே அதிகம் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

   

டேட்டிங் செயலிகள் பயன்பாட்டில் 18 சதவீத பயனர்களுடன் பெங்களூரு முதலிடத்திலும், 17 சதவீதத்துடன் ஐதராபாத் இரண்டாம் இடத்திலும் உள்ளன. டெல்லி (11%) மற்றும் மும்பை (9%) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதத் தரவுகளின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.