மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்ட அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறையின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நோயாளி ஒருவரை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸில், அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸின் உட்புறம் அசுத்தமானது. பொதுவாக ஆம்புலன்ஸைத் தூய்மைப்படுத்துவது அந்த வாகனத்தின் ஊழியர்கள் அல்லது மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்களின் கடமையாகும். ஆனால், அங்கு நடந்ததோ வேறு.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நோயாளியுடன் வந்த பெண் உறவினர்களிடம் துடைப்பம் மற்றும் மாப் (Mop) ஆகியவற்றைக் கொடுத்து, ஆம்புலன்ஸைச் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். வேறு வழியின்றி அந்தப் பெண்களும் ஆம்புலன்ஸைத் துடைத்துச் சுத்தம் செய்துள்ளனர். இந்த அவல நிலையை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனை சிவில் சர்ஜன் டாக்டர் யஷ்வந்த் வர்மா கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்றாலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
