கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை வழிமறித்து ஏற முயன்றபோது பெரும் மோதல் வெடித்தது. பேருந்தை எங்கும் நிறுத்த முடியாது என பெண் நடத்துநர் கண்டிப்புடன் கூறியதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், அவரைத் தள்ளிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென அந்த நபர் பெண் நடத்துநரின் கன்னத்தில் அறைந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தக் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதேபோல பெங்களூருவிலும் பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதுபோன்ற தொடர் நிகழ்வுகளால் அரசுப் பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.
