2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இம்முறை தனது எண்ணிக்கையை உயர்த்தி குறைந்தபட்சம் 35 தொகுதிகளைப் பெற ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி பாஜக கூடுதல் இடங்களைக் கோரினாலும், அதிமுக தலைமை அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்கத் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கையை விட ‘வெற்றி வாய்ப்பு’ உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கினாலும், அவை பாஜக வெற்றி பெறச் சாதகமான இடங்களாக இருக்கும் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது.
இதனால் 160 முதல் 170 தொகுதிகள் வரை தாங்கள் போட்டியிட்டால் மட்டுமே தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியின் வியூகமாக உள்ளது. தொடர் தோல்விகளைத் தவிர்க்கவும், தனது தலைமையின் வலிமையை நிரூபிக்கவும் மிகவும் கவனத்துடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
