மத்தியப் பிரதேச மாநிலத்தின் விதிஷா பகுதியில் பார்ப்போர் நெஞ்சை உருக வைக்கும் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த 42 வயதுடைய பேஷன் டிசைனர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது தாயார் தன் மகன் இறந்துவிட்டதை ஏற்க முடியாமல், அவர் மீண்டும் உயிருடன் திரும்பி விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் கடந்த 5 நாட்களாக மகனின் உடலின் அருகிலேயே அமர்ந்து தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.
நாட்கள் கடந்ததால் அந்த வீட்டின் உள்ளே இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனை கவனித்த அப்பகுதி பால் விநியோகஸ்தர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. உடனே காவல்துறையினர் உயிரிழந்த மகனின் உடலைக் கைப்பற்றியதுடன், சோர்வடைந்து காணப்பட்ட அந்த தாயை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
