அன்றாட வாழ்க்கைப் போட்டிகளிலிருந்தும் ஓயாத பணிச்சுமையிலிருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றிப் பார்த்து வாழ்க்கையை ரசித்து வாழ்வது பல வெளிநாட்டவர்களின் வாழ்க்கைமுறையாகவே மாறியிருக்கிறது. சிலர் ஆறு மாத காலம் உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு, மீதமுள்ள ஆறு மாதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வதிலேயே கழிக்கிறார்கள். இன்னும் சிலரோ இருக்கும் சொற்ப வசதிகளை வைத்துக்கொண்டே, மிதிவண்டியிலேயே கூட எல்லைகளைத் தாண்டி உலக வலம் வரும் அதிதீவிரப் பயணப் பிரியர்களாக இருக்கிறார்கள்.
அந்த வரிசையில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘வின்டர்’ (Winter) என்னும் நபர், உலகெங்கிலும் உள்ள அனைத்து ‘ஸ்டார்பக்ஸ்’ (Starbucks) காஃபி கடைகளுக்கும் நேரில் சென்று காஃபி குடிப்பதை தனது வாழ்நாள் விசித்திர இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அசாத்தியப் பயணம், சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை உலகின் பல்வேறு மூலையிலிருக்கும் ஸ்டார்பக்ஸ் கிளைகளைத் தேடிப்பிடித்துச் செல்வதையே தனது முதன்மைப் பொழுதுபோக்காக அவர் மாற்றி வைத்துள்ளார்.
இதுவரை 74 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள வின்டர், மொத்தம் 20,563 ஸ்டார்பக்ஸ் கிளைகளுக்குச் சென்று காபி குடித்துப் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த நீண்ட நெடிய காஃபிப் பயணத்திற்காக அவர் இதுவரை சுமார் 1.8 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய்) செலவிட்டுள்ளார். உலகெங்கும் தினமும் புதிது புதிதாகக் கடைகள் திறக்கப்பட்டாலும், புன்னகையோடு தனது காஃபிப் பயணத்தைத் தொடரும் அவர், “உலகில் உள்ள அனைத்து ஸ்டார்பக்ஸ் கிளைகளுக்கும் சென்று காஃபி குடிப்பதே எனது இறுதி இலக்கு” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
