அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடனான மோதல் சூழலில் அமெரிக்காவிற்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை ‘நன்றிகெட்டவர்கள்’ எனச் சாடியுள்ள டிரம்ப், மிக முக்கியமான இந்தத் தருணத்தில் அவர்களின் மௌனம் குறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு நலன்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொண்டு, நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் நட்பு நாடுகளின் போக்கு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மறுபுறம், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், அமெரிக்காவின் அமைதி ஒப்பந்த முன்மொழிவை ஈரான் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி மாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் ராணுவ ரீதியாகப் பலவீனமடைந்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார். டிரம்பின் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடும், நேட்டோ நாடுகளுடனான விரிசலும் வளைகுடா பிராந்தியத்தில் ஒரு பெரிய போருக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுவதால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.
