தமிழக அரசியலில் தவெக தலைமையிலான ஆட்சிக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆட்சியைக் கவிழ்ப்பதில் திமுகவும் அதிமுகவும் மறைமுகக் கூட்டணியில் செயல்படுவதாகவும், சட்டப்பேரவை கூடும்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தச் சூழலை முறியடிக்கவும், சட்டமன்றத்தில் ஆட்சியின் பெரும்பான்மையைத் தக்கவைக்கவும் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவசரமாக டெல்லி சென்று முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லி பயணத்தின்போது, தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ (CPI) தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா மற்றும் சிபிஎம் தேசியப் பொதுச்செயலாளர் எம். ஏ. பேபி ஆகியோரை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் மாநிலத் தலைமைகள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் நிலையில், ஆட்சிக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்குமாறு தேசியத் தலைமையிடம் அவர் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய சிபிஎம் பொதுச்செயலாளர் எம். ஏ. பேபி, பாஜகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து தங்களது ஆதரவு தொடரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
