பா.மா.க நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும், அன்புமணி தரப்புக்கும் இடையே நிலவும் மோதல்களைத் தொடர்ந்து, பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருள், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துச் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “அன்புமணி, ராமதாஸைக் கொலை செய்து கட்சியைப் பறிக்கப் பார்க்கிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறைகேடுகள் செய்து அன்புமணி தலைவர் என்ற உத்தரவைப் பெற்றிருந்ததாகவும், ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது பா.ம.க.வில் ‘நிறுவனர்’ பதவி மட்டுமே உள்ளது. ‘தலைவர்’ பதவி இல்லை என்று தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலையில், அன்புமணி தரப்பினர் பா.ம.க. பெயரில் ₹10 ஆயிரம் வசூலித்து விருப்ப மனுக்கள் வாங்குவது கட்சியினரை ஏமாற்றும் செயல் என்றும், இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அருள் கண்டனம் தெரிவித்தார். எனவே, பா.ம.க.வினர் யாரும் பணம் கட்டி விருப்ப மனு வாங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி. மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது என்றும், தைலாபுரம் தோட்டத்தில் கையெழுத்திடுபவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
