“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

By Muthu Mani on வைகாசி 20, 2026

Spread the love

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில், தங்களை வழக்கம்போல ஃபீல்டுக்கு அனுப்பிக் கள நிலவரங்களைச் சேகரிக்க விடாமல், நள்ளிரவு வரை தொடர்ந்து ‘மீட்டிங் மீட்டிங்’ என்று நடத்தி தங்களை வாட்டுவதாக உளவுத்துறையில் பணியில் இருப்போர் தற்போது கதறி வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு பாணியிலேயே இங்கும் கூட்டங்களை நடத்தி அழுத்தங்களை உருவாக்குவது கீழ்நிலை அதிகாரிகளிடையே கடும் சோர்வையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. ஆனால், ‘இந்தக் குழுவெல்லாம் நியாயமாக விசாரித்து நீதியை நிலைநாட்டாது’ என்று சொல்லி, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அப்போது சி.பி.ஐ விசாரணை கோரியது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க). தற்​போது த.வெ.க அரசு பதவியேற்றுள்ள அரசியல் சூழ்நிலை மாற்​றத்​தில், அதே அஸ்ரா கர்க் உளவுத்​துறை ஐ.ஜி-யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்; மேலும், டி.ஐ.ஜி-யாக சரவணன், எஸ்.எஸ்.பி-யாக சண்முகம், மயில்வாகனன், ஸ்டாலின் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டு உளவுத்துறையின் புதிய கூட்டணியாகச் செயல்பட்டு வருகிறார்கள்.