பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி நிறுவன நிர்வாகியுடனான மோதலில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். எளிதில் பிணை கிடைக்கக்கூடிய வழக்காக அது இருந்தபோதிலும், அவர் சுமார் 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாகத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு 2021-ல் தனது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த அநீதியை எதிர்த்து ஜப்பானில் இருந்தபடியே கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் தொடர்ந்த சட்டப் போராட்டத்திற்குத் தற்போது நீதி கிடைத்துள்ளது. வழக்கை விசாரித்த ஆணையம், தேவையின்றி அவரைச் சிறைப்படுத்திய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், தனகாவுக்கு ரூ.75,000-ஐ இழப்பீடாக வழங்கவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி வழங்கப்பட்ட தொகையைத் தனது வழக்கறிஞர் வாயிலாகப் பெற்ற தனகா, அதனைத் தனது இந்திய மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார்.
