ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், வாடகை சைக்கிளில் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது, தான் வைத்திருந்த பணப்பை , ரொக்கம், வீட்டின் சாவி மற்றும் விலைமதிப்பற்ற மைக்ரோஃபோன் உள்ளிட்ட சுமார் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை சைக்கிள் கூடையில் மறந்து வைத்துவிட்டு உணவகத்திற்குள் சென்றுவிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தபோது, பையைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பொருட்கள் திருடுபோய்விட்டதாகக் கருதிய அவர், உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கத் தீர்மானித்தார். காவல் நிலையம் சென்றடைந்த அவர், தொலைந்த பையைப் பற்றி விவரித்தபோது, காவல்துறையினர் அவருக்குப் பெரிய ஆச்சரியத்தை அளித்தனர். சிறிது நேரத்திற்கு முன்புதான் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பையைக் கண்டெடுத்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.instagram.com/reel/DcG1EEezxdB/?utm_source=ig_web_button_share_sheet
பரிசோதித்துப் பார்த்ததில், அதில் இருந்த ரூ 1 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் எதுவும் குறையாமல் அப்படியே இருந்தன. ஜப்பான் மக்களின் நேர்மையையும் மனிதநேயத்தையும் கண்டு நெகிழ்ந்துபோன சோனம் மிதா, இந்த அனுபவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்து ஜப்பான் மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
