அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி கர்கா டிங்கிள் கோங்கோ, தன்னை ‘சீனக் குழந்தை’ என்று அழைத்ததற்கு எதிராகப் பேசி இணையத்தில் வைரலானார். தனது தோற்றத்தை வைத்து அவ்வாறு அழைப்பது எனக்குக் கோபத்தையும் வருத்தத்தையும் தருகிறது என்றும், “எங்களை இந்தியர்கள் என்று சொல்லுங்கள்” என்றும் அவர் பதிவிட்ட வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றது. வடகிழக்கு இந்திய மக்கள் சந்திக்கும் இனவாதப் பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் அச்சிறுமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்கள் அளித்த அளப்பரிய ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்து அச்சிறுமி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மகிழ்ச்சியுடன், “இப்போது நான் இந்தியன் ஆகிவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார். அவரது தாய் அவருடன் இணைந்து, “இப்போது அனைவரும் உன்னை இந்தியாவின் செல்லக்குழந்தை என்று அழைக்கிறார்கள்” எனக் கூறுகிறார்.
https://www.instagram.com/reel/DcUjd8AP2Bm/?utm_source=ig_web_button_share_sheet
இந்த நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. முதல் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 82,000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. முன்னர் வருத்தமடைந்த சிறுமி, தற்போது மக்களின் அன்பை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தது அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.
