தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சத்தியா என்பவரது 4 வயது பெண் குழந்தை சந்தோஷியா, மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சத்தியாவின் கள்ளக்காதலனான இசக்கிராஜ் (20) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. தாய் சத்தியா குழந்தையை இசக்கிராஜிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், இந்த விபரீதம் நடந்துள்ளது. குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன் பின்னரே கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட இசக்கிராஜை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயின் கள்ளக்காதலனே 4 வயதுக் குழந்தையைச் சிதைத்துக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
