மத்தியப் பிரதேசத்தின் ஷோப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவின் கூரையில் இருந்து மழைநீர் நேரடியாக கசிந்து சொட்டும் அதிர்ச்சிளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் படுக்கையில் இருக்கும்போதே, அவருக்கு அருகிலேயே தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. மருத்துவமனையின் போதிய பராமரிப்பின்மை மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகளை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற முக்கியமான பகுதியில் கூட அடிப்படை சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருப்பது குறித்து நோயாளிகளின் குடும்பத்தினர் பெரும் வேதனையும் கவலையும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. கூரையில் உள்ள பழுதுகளை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
