உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் திங்கள்கிழமை காலை அரங்கேறியுள்ளது. அனூப் என்ற அந்த நபர், தனது மனைவி சோனி (35) வீட்டில் இருந்த நகை மற்றும் 35,000 ரூபாய் பணத்துடன் காதலனுடன் ஓடிவிட்டதாக ஐந்து நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்
இந்த புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை சோனியை மீட்ட போலீசார், விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். திங்கள்கிழமை காலை பெண் காவலர் ஒருவர் சோனியை காவல் நிலைய வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு காத்திருந்த அனூப் திடீரென சோனியைப் பின்னால் இருந்து தாக்கி மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றார். பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் காவல் நிலையத்திற்குள்ளேயே இந்தத் துணிச்சலான கொலை நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
