தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களைத் தொடர்ந்து, தற்போது சத்துணவு ஊழியர்களும் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்காகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 8-ம் தேதி அடையாளப் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசுத் துறையினர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களின் இந்த முடிவும் தமிழக அரசுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
