நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருக்கம்பாடி ஆதிவாசி காலனியைச் சேர்ந்த கேசவன் மற்றும் அவரது மனைவி மாதி ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள். இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த கேசவன் மனைவியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்தது தெரியாமல் போதை மயக்கத்தில் அவர் அருகிலேயே உறங்கிய கேசவன், மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மாதி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் செய்த செயலால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் நிலைகுலைந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த சேரம்பாடி போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
