நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற நபருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் மணிகண்டனுடன் தொடர்ந்து தினம் தோறும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்தார். அந்த சமயத்தில் அவர்களை விலக்கிவிட வந்த மணிகண்டனின் அண்ணன் மகனான சூர்யா (21) என்பவரை செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறு செய்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இருந்தாலும் தொடர்ந்து சூர்யாவுக்கும் செல்வத்துக்கும் இடையே இதை காரணமாக வைத்து அடிக்கடி சண்டை வந்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் இடையே நடந்து வந்த வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறியது. அப்போது அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து விளக்கி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, என் அப்பா கிட்ட பிரச்சனை பண்ணும் போது உன்னை போட்டு இருக்கணும் என்று தனது தந்தையிடம் எப்படி சண்டையிடலாம் என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டினார். இதில் செல்வத்தின் தலையில் வெட்டு காயமும் தோள்பட்டை பகுதியில் காயமும் ஏற்பட்டது. இதனால் பலத்த காயமடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உடனே இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
