குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கும்பலால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, பர்வேஸ்கான் பதான் (23) என்பவர் அச்சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி தனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியதால், அவர்களும் அந்த சிறுமியைத் தொடர்ச்சியாக மிரட்டி இக்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக இந்தத் துயரத்தைச் சகித்து வந்த சிறுமி, ஒருகட்டத்தில் தைரியத்தை வரவழைத்துத் தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கேதா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் இறங்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாரதீய நியாய சன்ஹிடா (BNS) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான பர்வேஸ்கான் பதான் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
